நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்தமடப்புரம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கள்ளச் சாராயம் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சாராய விற்பனை செய்வதாகக்கூறி பலமுறை காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களிடம் கிராம மக்கள் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்றுமடப்புரம் சாலையில் திரண்ட பொதுமக்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளைசாலையில் உடைக்க முயன்றனர்.
சம்பவம் அறிந்து வந்த செம்பனார்கோவில் காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரிடம் இருந்து பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளை பிடுங்கி சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பொதுமக்கள் எச்சரித்தனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.