நாகை மாவட்டம் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட குத்தாலம் காவல் சரகம், அசிக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி ஏசுராஜ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் வியாபாரி வாசுகி மற்றும் அவரது மகள் ரஞ்சிதாவிடம் பேசும் ஆடியோ அண்மையில் வாட்ஸ்-ஆப்பில் பரவி வைரலாகியது. கள்ளச்சாராயம் விற்பதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட இடத்தகராறு தொடர்பாகவும், போலீசாருக்கு கையூட்டு கொடுத்தது தொடர்பாகவும் இரண்டு சாராய வியாபாரிகள் பேசிய ஆடியோ காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சாமிநாதன் உத்தரவின்பேரில், குத்தாலம் போலீசார் சாராய வியாபாரிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், அசிக்காடு ஆற்றங்கரையில் 110 லிட்டர் பாண்டி சாரயத்தை பதுக்கி வைத்து, விற்பனை செய்துவந்த சாராய வியாபாரி வாசுகி(40) அவரது மகள் ரஞ்சிதா(19) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு சாராய வியாபாரியான ஏசுராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.