நாகை மாவட்டம், திருப்பூண்டி பகுதியில், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சித்துவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரை மேற்கொள்ள ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசனைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
பின்னர், திறந்தவெளி வாகனம் மூலம் திருப்பூண்டி கடைத்தெருவில் பர்பபுரை மேற்கொள்ள கமல்ஹாசன் சென்றார். அப்போது, அவரது மைக் சரியாக வேலை செய்யாததால், பரப்புரை சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பேசிய அவர், திருப்பூண்டி என்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி என்றும், கீழ்வேளூர் தொகுதி என்பதற்கு பதிலாக திருப்பூண்டி தொகுதி என்றும் உளறினார். பின்னர் சுதாரித்து, தொகுதியின் பெயரை சரியாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், "காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் ஊழல் ஆறு போல் ஓடிக்கொண்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க நல்ல தலைமை வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் அற்புதமானவை. ஏனெனில் எதிர்க்கட்சிகளும் காப்பி அடிக்கும்படியாக இத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையை கொள்வதுபோல் என் வாழ்கையில், நிஜத்திலும் ஊழல் செய்தால் பெற்ற பிள்ளையைக் கொன்றுவிடுவேன்" என்றார்.
தொடர்ந்து, நாகை, அபிராமி சன்னதி திடலில் பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பட்டுகோட்டை புறப்பட்டுச் சென்றார்.