மயிலாடுதுறை: புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மைப் பணியாளரான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இவரது இளைய மகள் உமாமகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் 2020ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், உமாமகேஸ்வரி மயிலாடுதுறை ஆராயத்தெரு அருகில் உள்ள குருக்கள் பண்டாரத் தெருவில் வாடகை வீட்டில் தனது தாய் தனலெட்சுமியுடன் தங்கி மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (தந்தை, கணவர் இருவரின் பெயரும் மாரிமுத்து) என்பவரை காதலித்து வந்த உமா மகேஸ்வரி, கடந்த 2022 டிசம்பர் 4ஆம் தேதி தனது தாயின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கணவருடன் மயிலாடுதுறையில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணமான நான்கே மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உமா மகேஸ்வரி, தனது கணவர் மாரிமுத்து சைக்கோ போல தன்மீது சந்தேகப்படுவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் உமா மகேஸ்வரியை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து தாய் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, ‘வீட்டைவிட்டு போகிறாயா? நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன்’ என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் 1 மாதமாகிய நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது, கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை அவர் போலீசாரிடம் வழங்கி, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.