கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விடுமுறையை அறிவித்தது.
கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களை வெளியே விளையாடச் செல்லாமல் கவனிப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு மிகக் கடினமான பணியாக மாறியிருக்கிறது. இதனை புரிந்துகொண்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக ஒரு புது உத்தியை நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஏ.முருகன் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் இருந்து பள்ளியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து தினந்தோறும் மாலை 6 மணிக்கு பேஸ்புக் மூலமாக நேரலையில் ஓவிய வகுப்பு எடுத்து வருகிறார்.
ஓவிய வகுப்பு என்றால் ஒப்புக்கு சொல்லிக்கொடுக்கும் வகுப்பாக அல்லாமல், பென்சில் ஓவியம், க்ரையான் ஓவியம், வாட்டர் பெயிண்டிங் என ஓவியக்கலையில் இருக்கக்கூடிய அனைத்து நுணுக்கங்களையும் மிக எளிமையாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
அதன் பின்னர் ஓவியப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி, அவற்றை உடனுக்குடன் வாட்ஸ்அப் குரூப்பில் திரும்பப் பெற்று, திருத்தம் செய்து உரிய அறிவுரைகளை வழங்குகிறார்.
தரமான கேமரா, தரமான ஸ்டுடியோ என எந்தவித வசதியுமின்றி கைவசம் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு தினமும் வகுப்புகளை நடத்திவரும் இவருக்கு, தமிழ்நாடு தாண்டி அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஓவியம் கற்கும் புதுப்புது மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பெருகி வருகின்றனர்.
மாணவர்களின் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விடுமுறையை தனது ஓவியக்கலையின் மூலம் பயனுள்ள வகையில் செலவிடச் செய்யும் இந்த ஆசிரியரின் செயல் மக்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முன்வருமா தமிழ்நாடு அரசு ?