மயிலாடுதுறை: சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரட்டேஸ்வரர் ஆலயம் ஆகும். சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
இந்த ஊர் பாலசாஸ்தாவான ஐயப்பனின் பிறந்த ஊர் எனக் கூறப்படும் நிலையில், ஐயப்பனின் பாதுகாவலரான வழிக்கரையான் என்கிற வீரபத்திர சுவாமிக்கும் இவ்வூரில் கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு, தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுடன் சேர்த்து வழிக்கரையான் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்து இரண்டு கோயிலுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து மகா சபா அமைப்பினர் போராட்டங்களை நடத்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் வழிக்கரையான் வேடமணிந்த ஒருவருடன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த இந்து மகா சபா அமைப்பினர், அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, மாநில தலைவர் ராமநிரஞ்சன் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நமது கோரிக்கையை ஏற்று இரு கோயில்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஐயப்பன் பிறந்த ஊரான வழுவூரில் வரலாற்று சுவடுகளை ஆய்வு செய்து, வீரட்டேஸ்வரர், வழிக்கரையான் ஆகிய இரு கோயில்களிலும் விரைவில் திருப்பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சனிப்பெயர்ச்சி 2023; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் திரளும் பக்தர்கள்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!