மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.14) மிகக் கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுத்திருக்கிறது.
அதன்படி, நேற்று (நவ.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும், மாவட்டத்தில் பரவலாக லேசானது முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து வருகிறது.
மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு, சந்திரபாடி, கொடியம்பாளையம், சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வானகிரி, மாணிக்கபங்கு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராம மீனவர்கள், மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், தங்களது படகு மற்றும் உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே போன்று, கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.14) விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
காலை ஆறு மணி நிலவரப்படி மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 84.1 மி.மீ, செம்பனார் கோவில் 55.6மி.மீ, மணல்மேடு 58.0 மி.மீ, சீர்காழி 73.2 மி.மீ, கொள்ளிடம் 63.8, பொறையார் 77.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடாமல் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழை சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு உகந்தது என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், நள்ளிரவு முதலே மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!