பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ , "காங்கிரசில் சுதந்திரமாகப் பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்தக் கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி குன்றிய கட்சி காங்கிரஸ்" என்று கடுமையாக விமர்சித்தார். அவர் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகப் பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், மாவட்ட செயலாளர் தலைமையில், குஷ்பு மீது நடிவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய மாவட்டச் செயலாளர், ”காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ அக்டோபர் 13ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்றார். அது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
அரசியல் எதிரிகளைத் தாக்க இவர் பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. அதனால் உடனடியாக அவர் மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92இன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குஷ்பூ நேற்று மாற்றுத்திறனாளிகள் குறித்து தவறுதலாகப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குஷ்பூவிற்கெல்லாம் பதவி அளிக்கமுடியாது என பாஜகவினர் பேசுவது கேட்கிறதா?'