நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே கொட்டாயமேடு கிராமத்தில் அதிகளவில் இறால் குட்டைகள் உள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. உப்பு நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் போனதால், அத்தொழில் முற்றிலும் அழிந்துவிட்டது. தற்போது, குடிநீரும் முற்றிலும் உப்பாக மாறிவிட்டது எனவும், அப்பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வருகிறது எனவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், அப்பகுதி மீனவர்கள் தினமும் டேங்கர் லாரிகள் மூலம் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ. 5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், அந்தக் குடிநீரை இறால் குட்டை உரிமையாளர்களே டேங்கர் லாரியில் விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, வட்டாட்சியர், ஊராட்சி ஆணையர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இறால் குட்டைகளில் தேக்கி வைத்திருந்த உப்பு நீரை வெட்டி வெளியேற்றினர்.
பின்னர், இறால் குட்டைகளை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பட்டினம் காவல்துறையினர், இறால் குட்டைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் மீனவர்கள் கலைந்து சென்றனர். மேலும், இறால் குட்டைகளை முழுமையாக அகற்றாவிட்டால் அடுத்தகட்டமாக சாலை மறியல் செய்வோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.