தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது.
இதனை அறியாத நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற பொதுமக்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மனுக்களை புகார் பெட்டியில் போட்டு விட்டு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் தங்களுக்கு இதுவரை கஜா புயல் நிவாரண தொகை, பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றும், தங்கள் குறைகளை எடுத்துக் கொள்ள ஆளில்லை எனும் ஆதங்கத்துடன் புலம்பியபடி திரும்பி சென்றனர்.