அரசு ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை பல காலமாகவே பொதுமக்கள் கூறிவருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை போக்கும் விதமாக நாகை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட திருமகள் ஒன்றிய வட்டார வள மைய பொறுப்பாளர் ஆசிரியர் அமுதா- சுரேஷ்குமார் தம்பதியினர் செயல்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன நிலையில், தனது மகன் நரேன் ராம்ஜியை நாகை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். அவருடைய முதல் குழந்தையான நக்சத்ராவும் இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
பல அரசு ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த ஆசிரியரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவரை நாகை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட, உதவி திட்ட அலுவலர் பீட்டர் பிரான்சிஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். இதுபோன்ற முன்மாதிரி செயல்பாடுகளில் ஈடுபட பலரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டனர்.