மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிபவர், திருமுருகன். இவர் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எளிமையாக கற்பிக்கும் நோக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளாகப் பாடல்கள் வாயிலாக அறிவியல் வினா-விடைகளைக் கற்பித்து வந்தார்.
கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்குப் பிறகு, மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கரோக்கி இசையுடன் பாடும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
''வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" என்ற சினிமா பாடலின் மெட்டில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் வரும் செல், திசுக்கள், உறுப்பு மண்டலம், சிறுகுடல், உணவுக்குழாய், பல், கண், கல்லீரல், கணையம் ஆகியவற்றைப் பற்றியும், தாவரவியல் பாடத்தில் வரும் ஒளிச்சேர்க்கை, பச்சையம் ஆகியவற்றைப் பற்றியும் இவர் பாடல் மூலமாக விளக்கியுள்ளார்.
மேலும், 'பூவே பூச்சூடவா, உந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா' என்ற சினிமா பாடல் மெட்டில், இயற்பியல் பாடத்தில் வரும் நியூட்டன் விதி, பாஸ்கல் விதி குறித்தும், பாதரசமானி, காற்றழுத்தமானி, பழரசம் உறிஞ்சும் குழல், மணிக்கடிகாரம், ஒலிமானி ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் எளிய முறையில் பாடல் மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிரியர் திருமுருகனின் இந்த முயற்சிக்கு மாணவர்களும் பெற்றோரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இசைஞானி பாட்டுக்கு மறுவுருவம் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்