ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஒரு தினத்தை மட்டுமே நம்பி பல தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை செய்வதில் ஈடுபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பெரிய சிலைகளை செய்வதற்கு இவர்களுக்கு ஆர்டர்கள் குவியும். ஆனால், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் விநாயகர் சிலைகளை செய்வதற்கான ஆர்டர்களை யாரும் கொடுக்கவில்லை என்று சிலை செய்யும் தொழிலாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நாகை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய மண்பாண்டத் தொழிலாளி முருகன் கூறுகையில், " விநாயகர் சதுர்த்திக்காக வழக்கம்போல் மண்பாண்ட பொருள்கள் மற்றும் கடந்த இரண்டு மாதங்களாக 3 அடி உயரம் முதல் 15அடி உயரம் வரை கற்பக விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர், லட்சுமி விநாயகர், கருட விநாயகர், காளிங்கராய விநாயகர், பள்ளிகொண்ட விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவுப்படி ரசாயன கலவை இல்லாமல் மரக்கூழ், காகிதம், உள்ளிட்ட பொருள்களை கொண்டு வடிவமைத்து இருக்கிறோம். ஆனால், இந்த கரோனா பரவல் காரணமாக இதுவரை எங்களுக்கு ஆர்டர் வரவில்லை” என்றார்.
மண்பாண்டத் தொழிலாளி கார்த்திகேயன் கூறுகையில், “வட்டிக்கு கடன் வாங்கி 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்திருக்கிறோம். ஆனால் கரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே போவதினால் மக்கள் யாரும் ஆர்டர் கொடுக்க முன்வராததால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே எங்களது நிலமையை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு மீண்டும் கோயில்களை திறந்து, கோவில் திருவிழாக்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ’மருத்துவ செலவுக்கு காசில்ல’ - குமுறும் பேக்கரி உரிமையாளர்!