நாகை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள தோப்படி, கிராம மக்கள் கஜா புயலால் தங்களது குடியிருப்புகள் இழந்தனர். இந்நிலையில், வீடு இல்லாதவர்களை சந்தித்த சீஷா தொண்டு நிறுவனத் தலைவர் பால் தினகரன் நிரந்தரக் குடியிருப்புகள் கட்டித் தருவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி, தோப்படி கிராம மக்களுக்கு 22 புதிய வீடுகள் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இன்று புதிய வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சீஷா தொண்டு நிறுவனத் தலைவர் பால் தினகரன் புதிய வீடுகளை திறந்துவைத்து தோப்படி கிராமத்தைச் சேர்ந்த 22 நபர்களுக்கு குடியிருப்பின் சாவியினை ஒப்படைத்தார். மேலும், குடும்பம் நடத்துவதற்கான சமையல் பாத்திரம், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். குடியிருக்க வீடுகள் இல்லாத தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தந்து உதவிய சீஷா தொண்டு நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கிராம மக்கள் கஜா புயலினால் வீடுகளை இழந்துள்ளதாகவும், சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் முதல் கட்டமாக ஆலங்குடி, தேரடி ஆகிய கிராமங்களை தத்தெடுத்து மூன்று கோடி ரூபாய் மதிப்பில் 100 வீடுகளும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துதருவதாக பால் தினகரன் உறுதியளித்துள்ளார்.