நாகப்பட்டினம்:- நண்பன் பிறந்தநாளுக்கு ஒன்றுகூடி கறிவிருந்து சமைத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நண்பர்களை காவல் துறையினர் கைதுசெய்து உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்பாதியைச் சேர்ந்த பரத் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் 20 பேர் ஒன்று சேர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி ஆற்றங்கரை ஓரத்தில் பிரியாணி சமைத்துள்ளனர்.
மேலும், ஒரே இலையில் சாப்பிட்டு அதை வாட்ஸ்-ஆப்பில் பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட இந்தப் புகைப்படத்தை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மேலப்பாதியைச் சேர்ந்த பரத் அப்பு, அகிலன், மாரியப்பன், உள்ளிட்ட 8 பேரை கைது செய்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நிற்க வைத்து, கரோனா விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு பாடம் நடத்தினர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.