தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”கர்நாடகாவின் வடிகாலாகத்தான் இதுவரை தமிழ்நாடு இருந்து வருகிறது. காவிரி பிரச்னை தீர்ப்பில் தினந்தோறும் நீர் பங்கீடு குறித்து இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து தினந்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சத்தை இடம் பெறச்செய்தால்தான் டெல்டா மாவட்டங்களின் தேவையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.
மேட்டூர் அணை 86 ஆண்டுகால வரலாறு கொண்டது. இதுவரை மேட்டூர் அணை முழுமையாக தூர்வாரப்படவில்லை. மேட்டூர் அணையை தூர்வாரினால் இன்னும் 3 அடி நீரை அதிகமாக சேமிக்க முடியும். உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்த இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுடைய குறுக்கீடு இல்லாமல் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் யார் நல்லவர்கள், வல்லவர்கள் என்பது தெரியவரும். ஆங்கிலேயேர் காலத்தில் உருவாக்கப்பட்ட மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு உடனே அறிவிக்க வேண்டும்” என்றார்.