மயிலாடுறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான பல்லம் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. வேட்பாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய நடவடிக்கைகளால் கிராமப் பொருளாதாரமும், சிறு, குறு தொழில்களும், அமைப்பு சாரா தொழில்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவலின்போது நிலைமையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை. ஹரியானா, பஞ்சாப் மாநில உழவர்கள் குறைந்தபட்ச ஆதாரவிலையைக் கேட்டு 100 நாள்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், மத்திய அரசு அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருந்தும் அவர்கள் உழவர்களின் பிரச்சினையை அவையில் விவாதிக்கவில்லை.
தமிழ்நாட்டில், வேலைவாய்ப்பின்மை, ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், பாஜகவுடன் அதிமுக கைக்கோத்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டார். காங்கிரஸ், திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நமச்சிவாயம், அனந்தகுமார் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர். கிரண்பேடி மூலமாகப் புதுச்சேரியில் செயல்பட முடியாமல் செய்தது மத்திய அரசு. புதுச்சேரிக்கு வந்த அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அரசு அளித்த நிதியை, புதுச்சேரி அரசு பயன்படுத்தவில்லை என்று கூறினர்.
ஆனால், சிறந்த நிர்வாகத்திற்கான விருதினை மத்திய அரசுதான் முதலமைச்சர் நாராயணசாமிக்கு வழங்கியுள்ளது. எது உண்மை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் தலைமை அலுவலர்கள் ஆலோசனை!