மயிலாடுதுறை: கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பேரணியாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் பரவி வரும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதில், கோயில் விழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி, கோயில் விழாக்களை நடத்த விலக்கு அளிக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் வரதாச்சாரியார் பூங்காவில் இருந்து பேரணியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனர்.
முன்னதாக அவர்கள் விநாயகர், நாரதர், ராமர், கருப்பசாமி, பச்சைக்காளி, பவளக்காளி, அரிச்சந்திரன், சந்திரமதி, விஸ்வாமித்திரர், பபூன் போன்ற பல்வேறு வேடமிட்டு, கைகளில் திருவோடு ஏந்தி வழியெங்கும் பிச்சை எடுத்தவாறு கூடுதல் ஆட்சியர் வாசுதேவனிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.