புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் பாழ் வடிகால் வாய்க்கால் வழியாக வந்து கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள வடக்குத் தெரு, புதுத்தெருவில் உள்ள 150 வீடுகளை சூழ்ந்தது.
சுமாராக 80க்கும் மேற்பட்ட வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. வடிகால் வாய்க்காலான பாழ் வாய்க்காலில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தண்ணீர் வடிய வழியில்லை.
தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்து பொதுமக்கள் இன்று (டிச.6) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். வெள்ளநீர் வடிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலைமறியலை கைவிட்டனர்.
இது தொடர்பாக அவ்வூர் மக்களிடம் கேட்கும்போது, காலையில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததாகவும், உணவு தயாரிக்கக் கூட வழியின்றி குழந்தைகளுடன் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கைவிடுத்தனர்.