மயிலாடுதுறை: கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவரைக் கட்டிதர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது சின்னமேடு மீனவ கிராமம். இந்தக் கிராமத்தில் பேரிடர் காலங்களில் கடல் சீற்றத்தால் தொடர்ந்து கரை அரிப்பு ஏற்பட்டுவருகிறது.
இப்படி இயற்கை பேரிடர்களில் கரை அரிப்பு ஏற்பட்டு, கரையோரம் இருந்த மீன் இறக்கும் காங்கிரிட் சாலை கடலில் அடித்து செல்லப்பட்டு வருகிறது.
இதே நிலை நீடித்து வருவதால், அதனைத் தடுக்க கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இச்சூழலில், புரெவி புயலால் கரை அரிப்பு ஏற்பட்டது. தற்பொது எஞ்சியிருந்த காங்கிரிட் சாலை கரை அரிப்பால் சேதமடைந்ததுள்ளது.
இதுவரை, 300 மீட்டர் தூரம் வரை கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 100 மீட்டர் தூரத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், உடனடியாக அரசு தங்களின் நீண்டநாள் கோரிக்கையான, கடற்கரையில் கருங்கற்களால் ஆன தடுப்புசுவர் அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.