மயிலாடுதுறை: சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கும், சாதாரண மீன்பிடி மீனவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால், மாவட்டத்தில் மீனவர்களுக்குள் நடந்த சுருக்குமடி வலைப் பிரச்னை காரணமாக ஒருவார காலமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
மீன்வளத்துறையிடம் பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 14ஆம் தேதி சுருக்குமடி வலையுடன் சென்ற பூம்புகார் சந்திரபாடி மீனவர்களை தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று நடுக்கடலில் சுற்றிவளைத்தனர்.
அப்போது, சுருக்குமடி விசைப்படகு மோதி ஒரு பைபர் படகு கடலில் மூழ்கியது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில் பூம்புகார் மீனவர்களுக்குச் சொந்தமான நான்கு பைபர் படகுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறியிருந்தனர்.
மீண்டும் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள்
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஆக. 20) திருமுல்லைவாசல் கிராமத்தில் மோதலில் ஈடுபட்ட சுருக்குமடி மீன்பிடி படகுகள், வலைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
குவிந்த அசைவப் பிரியர்கள்
எட்டு நாள்களுக்குப் பிறகு 20 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஆக. 22) அதிகாலையிலேயே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
காலை 8 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள் வலையில் மத்தி, கானாங்கெளுத்தி, பொடுவாய் உள்ளிட்ட சிறிய வகை மீன்களோடு வந்தனர்.
தரங்கம்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்குப் பின்னர் மீன் பிடிக்கப்பட்டதால், அதனை வாங்க அசைவப் பிரியர்கள் கடைவீதியில் குவிந்தனர்.
இதையும் படிங்க: 'பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தம்: பொதுப்பணித்துறை'