மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி மீனவர்கள் எட்டு பேருடன் காரைக்கால் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க 240 சிசி திறன்கொண்ட இழுவை விசைப்படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். நடுக்கடலில் ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் திசைமாறி ஆந்திர கடல் பகுதிக்குச் சென்ற படகினை ஆந்திர மாநிலம் நெல்லூர், சீனிவாசபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
தகவலறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மீன்வளத் துறை அலுவலர்களின் உதவியுடன் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் ஒன்பது பேரையும் மீட்டுக் கொண்டுவந்தனர். ஆனால் பறிமுதல்செய்யப்பட்ட படகினை விடுவிக்க ஆந்திர மீனவர்கள் மறுத்து, படகினை கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் கொண்டுசென்று நிறுத்தினர்.
படகு மீட்பு
இதையடுத்து தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார் தமிழ்நாடு அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, கடந்த (செப்டம்பர் 6) திங்கள்கிழமை மீண்டும் ஆந்திரா சென்று மாவட்ட ஆட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று (செப்டம்பர் 7) பறிமுதல்செய்யப்பட்ட படகை தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டுவந்தனர்.
அரசுக்கு கோரிக்கை
ஆனால் படகில் வைத்திருந்த வலைகள், பேட்டரி, டீசல் உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை ஆந்திர மீனவர்கள் எடுத்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள தரங்கம்பாடி மீனவர்கள் தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுகி, பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு வலியுறுத்தல் - கொள்கை விளக்கக் குறிப்பில் விளக்கம்