மயிலாடுதுறை: ஆழ்கடலில் இருக்கும் பவளக்கொடிகள், மீன் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதற்கு மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட 13 மீனவ கிராமங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்தத் தடையால் தங்களின் வாழ்வாதாரமான சுருக்கு வலை தொழிலும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரம்
சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்காதபட்சத்தில், தமிழ்நாடு அரசு மீன் பிடித்தொழில் ஒழுங்குமுறைச் சட்டம் 1983இன்படி தடைசெய்யப்பட்ட 21 வகையான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மூன்றாவது நாள் போராட்டமான இன்று (ஜூலை 19), தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றைக் கையில் ஏந்தியவாறு சந்திரப்பாடி மீனவ கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் பொறையார் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
மீனவர்களிடம் பேச்சுவார்த்தை
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் ஹரிதரன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறி சுட்டெரிக்கும் வெயிலில் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தேசிய கடல் மீன்வள மசோதா: அமைச்சர் எல். முருகன் மீனவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல்