கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை ஏற்று தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் கடந்த 21 நாள்களாக வீட்டிலே முடங்கியுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,
1. நாகை மாவட்டத்தில் காலை 6 மணிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீண்டும் காலை 10 மணிக்குள் கரை திரும்ப வேண்டும்,
2. மீன்களை துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது,
3. பிடித்துவரும் மீன்களை ஒரே வியாபாரியிடம் மட்டுமே விற்பனைசெய்ய வேண்டும்
என மாவட்ட மீன்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத நாகை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல போவதில்லை என முடிவுசெய்து வட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூகவிலகலைக் கடைப்பிடித்து மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி ஐந்தாயிரத்தை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: ஊரடங்கு எதிரொலி: பிரசவத்துக்காக படையெடுக்கும் கர்ப்பிணிகள்!