நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கமலா என்ற பெண் சில ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்ததாகவும் இதனால் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கமலா தொடர்ந்து மது விற்பனயில் ஈடுபட்டு வந்ததால் ஆவேசமடைந்த அப்பகுதி மீனவப் பெண்கள் தங்களது கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கமலாவின் வீட்டில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கமலா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மீனவப் பெண்கள் கூறும்போது, ’நாகப்பட்டினம் மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் அமைந்துள்ளதால், அங்கிருந்து விலை குறைவாக மதுபானங்களைக் கடத்திவந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். காவல்துறையினர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தனர்.