நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் நாகை துறைமுகத்தில் கருவாடு வாங்கி வியாபாரம் செய்துவருகின்றனர்.
இவர்கள் கருவாடு காயவைக்கும் இடங்கள் நாகை துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதால், கருவாடு வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் தயார்படுத்தப்பட்டு அந்தத் தளங்கள் அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட கருவாடு வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அதே இடத்தில் கருவாடு உலர்தளம் வேண்டும் எனக்கோரி, திடீரென்று இன்று நாகை அக்கரைப்பேட்டையில் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கருவாடு தளங்களைக் கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, மீனவ பெண்ணொருவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார். இந்தச் சாலை மறியலால், நாகை வேளாங்கண்ணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமத் தலைவர்கள், காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளுக்கு ஏற்றவாறு மாற்று இடத்தில் உலர்தளம் உடனடியாக அமைத்து தரப்படும் என நம்பிக்கை அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: 15 கிராம மீனவர்கள் வலியுறுத்தல்