மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரம்யா(32). ஐடிஐ படித்துள்ள இவர் 2015-ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றார். மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்த இவர், 2019ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு பணிக்கான ஆணை வழங்கப்பட்டு, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முதல்பெண் ஓட்டுநர் என்ற பெருமையை ரம்யா பெற்றுள்ளார்.
அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய ரம்யாவின் தன்னம்பிக்கை அனைவரின் பாராட்டை பெற்று பெண்களிடையே தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவுக்கு திருமணமாகி சந்தியாஸ்ரீ(13) என்ற மகளும், சந்தோஷ்(11) என்ற மகனும் உள்ளனர்.