நாகப்பட்டினம்: புதிய கடற்கரை செல்லும் சாலையில் ஆதித்யா சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு வந்த நபர் ஒருவர் தான் வட மாநில டிஐஜி எனக்கூறி பொருள்கள் வாங்கி விட்டு அதற்கு பணம் செலுத்தாமல் சென்றுள்ளார்.
அதேபோல் தம்பித்துரை பூங்கா அருகே உள்ள பழக்கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பழம் வாங்கிக் கொண்டு அதற்கும் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான காவல் துறையினர் வாஞ்சூர் சோதனை சாவடியில் அந்த நபரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது.
இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய கவிதாவிடம் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். கவிதா காவல் ஆய்வாளராக பணி உயர்வு பெற்று நாகப்பட்டினம் வந்தார். அவருடன் வந்த மகேஷ் தன்னை வடமாநில டிஐஜி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த 31 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஆண் நண்பரை பெண் காவல் ஆய்வாளர் கவிதா, அவர் தன் கணவர் என்று வெளிப்பாளையம் காவல் ஆய்வாளரிடம் பேசி சமாளித்துள்ளார்.
மேலும் அவரை கைது செய்யாமல் இருக்க சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
வடமாநில டிஐஜி எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் அவரை காப்பாற்ற துடிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கைம்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார் கைது