நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டு இடங்களில் 55 வயது மதிப்புடைய ஒரு ஆணும், 80 வயது மதிப்புடைய ஒரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து வாய்மேடு காவல் துறைக்குத் தகவல் வந்ததையடுத்து இரண்டு உடல்களையும் காவல் துறையினர் கைப்பற்றி நாகை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இருவருடைய உடலையும் பெறுவதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து உடல்களையும் அடக்கம் செய்ய மருத்துவமனை முடிவெடுத்து, அந்தப் பொறுப்பை வாய்மேடு தலைமைக் காவலர் சாவித்ரி ஏற்றார்.
நாகையில் ஆதரவற்றவர்கள் உடலை அடக்கம் செய்துவரும் ராஜேந்திரன் என்பவரின் உதவியுடன் மருத்துவமனையில் இருந்த உடல்களை எடுத்துச்சென்று நாகையில் உள்ள ஒரு மயானத்தில் சாவித்ரி அடக்கம் செய்துள்ளார்.
அடக்கம் செய்யும் முன் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளான மஞ்சள் தெளித்து, வாய்க்கரிசி போட்டு இறுதி அடக்கம் செய்தார்.
ஆதரவற்ற இரண்டு உடல்களை உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த பெண் காவலரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.