நாகப்பட்டினம் மாவட்டம், மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது ரேவதி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கணேசனுக்கும், ரேவதிக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (மே.22) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறின்போது கணேசன் தாக்கியதில் ரேவதி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து திருச்சியில் உள்ள தனது தாயாருக்குத் தகவல் தெரிவித்த ரேவதி, தன்னை திருச்சிக்கு அழைத்துச் செல்லுமாறும் தொலைபேசியில் கூறியுள்ளார்.
தாக்கப்பட்டதில் படுகாயம் ஏற்பட்ட போட்டோவை வாட்ஸ்அப் மூலம் தனது தாயாருக்கு ரேவதி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ரேவதியின் தந்தை நாகராஜனுக்கு ரேவதி தற்கொலை செய்து கொண்டதாக, நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாகப்பட்டினம் வந்த நாகராஜன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணேசன் ரேவதியை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என, வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரேவதி உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர்(ஆர்டிஓ) மணிமாறன் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க:தி.மலையில் மீன் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை