நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீரைக் கொண்டு முற்பட்டக்குறுவை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை விவசாயம் செய்யப்பட்டு, தற்பொழுது அறுவடை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அதுவும் அறுவடை சமயத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் பயிர்கள் விளை நிலத்திலேயே சாய்ந்துவிட்டன.
அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் அங்கே அவற்றை அடுக்கி மூடுவதற்கு சரிவர வசதி இல்லாததால் மூடைகள் மழையில் நனைந்து வருகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மழையால் நனைந்த நெல்லை அறுவடை செய்தால் வைகோலுடன் நெல்லும் வெளியேறி மகசூலை குறைத்துவிடும். நெற்பயிரை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றால் அங்கே ஈரப்பதம் 17 சதவீதம் இருக்கவேண்டும்.
மழைக்காலம் என்பதால் ஈரப்பதத்திற்கு சலுகை அளிக்கவேண்டும். நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடைகொண்ட மூடைகள் 600க்குமேல் எடுப்பது இல்லை என்றனர்.
இந்த நடைமுறை சிக்கல்களைப் புரிந்து கொண்டு விவசாயிகள் எடுத்துச் செல்லும் நெல் மூடைகள் அனைத்தையும் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏவிற்கு கரோனா!