நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது குறைந்துள்ளது. நெல் அறுவடை முடிந்து விட்டதால் கொள்முதல் நிலையங்களை அரசு மூட நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்துள்ள நல்லத்துக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரி, லாரியாக கொண்டு வந்து விற்பனை செய்துவருகின்றனர்.
இவ்வாறு நெல் கொள்முதல் செய்வதால் இப்பகுதியில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் குறைத்து விடுகின்றன. நல்ல விளைச்சல் உள்ள இடங்களில் பயிர் காப்பீடு வழங்குவது குறைக்கப்படுவது வாடிக்கை.
இதுபோன்று வெளிமாவட்ட நெல் இங்கே விற்கப்படும்போது பயிர் காப்பீடு குறையும் என்ற காரணத்தை வலியுறுத்தி வெளிமாவட்ட நெல் மூட்டைகளை விற்க விவசாயிகள் மறுப்புத் தெரிவித்து அதனைத் தடுத்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு 11 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து 356 நெல்மூட்டைகள் உடன் நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குள் நுழைந்த லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறைப்பிடித்து இதனைத் தடுக்க வேண்டுமென அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக்கோரினர்.