திருவாரூர்: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும், முக்கியமாக விவசாயத்திற்கு தேவைப்படும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது எனலாம். அதுமட்டுமின்றி, காவிரி நதி நீரும் கிடைக்காமல் பல விவசாயிகள் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் குருவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை நம்பி கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சரிவர தண்ணீர் இல்லாதால், பல பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகள் நேரடி விதைப்பின் மூலம் சம்பா சாகுபடியில் ஈடுப்பட்டனர். ஆனால், காவிரியில் இருந்து விவசாயத்திற்கு உரிய நீர் வராததாலும், பருவ மழையும் பெரியளவில் கை கொடுக்காததாலும் பல பகுதிகளில் சம்பா பயிர்கள் கருகி வருகிறது.
ஆகையால், பயிகள் கருகி வருவதால் இன்ஜின்களைக் கொண்டு பயிர்களுக்கு தண்ணீரைப் பாய்ச்சினர். மேலும், இன்ஜின் இல்லாத சிறு குறு விவசாயிகள் வாடகைக்கு என்ஜின் எடுக்க முடியாத சூழ்நிலையில், குடும்பத்துடன் பாசன வாய்க்காலில் கிடக்கும் தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து பயிர்க்ளுக்கு தெளிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இதுமட்டுமின்றி, மழை வேண்டி கிராமப்புறங்களில் கொடும்பாவி இழுத்தும், வயல் வெளிகளில் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் வருணபகவான் மழை பொழிந்து பயிரைக் காப்பற்ற வேண்டும் என வேண்டுகின்றனர். தற்போது எழிலூர், வங்க நகர், மருதவனம் பகுதிகளில் 1,100 ஏக்கர் சம்பா பயிர் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இனியும் தாமதிக்காமல் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் கருகி வரும் சம்பா பயிர்கள்.. நோயியியல் துறை பேராசிரியர் கூறும் அறிவுரை என்ன?