மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுக்கா திருவிழந்தூர் ஊராட்சியில் 46 ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு திறக்கப்படவில்லை.
வழக்கம்போல் இந்த ஆண்டும் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று திருவிழந்தூர், பல்லவராயன்பேட்டை, அப்பாசாவடி, சாக்கியம்பற்றி, அப்பங்குளம், கழுக்காணிமுட்டம், வேப்பங்குளம், ராதாநல்லூர் விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலைய வாசலில் அடுக்கிவைத்து, 20 நாள்களுக்கும் மேலாக காத்திருந்தனர்.
அண்மையில் பெய்த மழையில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
உடனடியாக, நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர், துறை அலுவலர்களிடம் ஆகஸ்ட் 21ஆம் தேதி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் விவசாயிகள் மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் நெல்மணிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாள்களில் கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்தவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'காய்கறி விற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் - வைரலான பேஸ்புக் போஸ்ட்'