தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண்மைச் சட்டத்திற்கு எதிராக விவசாய பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளைநிலங்களில் புதிதாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி நாகை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
கிடாரங்கொண்டான் கீரப்பாளையம் கிராமத்தில் 650 ஏக்கர் விளைநிலம் பல விவசாயிகளுக்கு சொந்தமாக உள்ளது. இதில் தற்போது கோடை உழவு விவசாய நாற்று நடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் கடந்த 10 நாள்களாக எந்தவித முன்னறிவிப்புமின்றி கெயில் எரிவாயு குழாய்களை, முன்பு பதித்த விளைநிலங்களுக்கு மேல் புதிதாக சிறு குழாய்களைப் பதிக்கவருவதோடு, அவல் வயல் வழியே செல்லும் பாசன வடிகால் வாய்க்கால்களை அந்நிறுவனத்தினர் தூர்த்துள்ளனர்.
இதனால் அண்மையில் பெய்த மழைநீர் தேங்கி நடவுசெய்த நாற்றுகள், நாற்றங்கால் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலச் சட்டத்துக்கு எதிராகப் புதிதாக கெயில் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் இயந்திரங்களைப் பறிமுதல்செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதில் நிலம் நீர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் விஷ்ணுகுமார், வழக்குரைஞர் வேலு குபேந்திரன், அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறப்பு அலுவலர்