மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்டப்பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
விவசாயிகள் அறுவடை செய்த பயிர்களை கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது முதல் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பயிர்க்காப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என அவ்வப்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் மணக்குடி பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தினை பத்து கோடி வரை அரசு கொடுத்து வாங்கி உள்ளதாகவும்; ஆனால், அங்கு விவசாயம் செய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும்; அதனை அரசு பெற்று தர வேண்டும் என திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:விடுதலைப்போரில் வீரத்தமிழகம் முப்பரிமாண ஒளி ஒலிக்காட்சி..சென்னையில் செப்.1 வரை நீட்டிப்பு