மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4,986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோயிலில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தியை விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.
இதில் செம்பானார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று கொள்முதல் நடைபெறும். இதற்காக விவசாயிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே தங்கள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை வரவேண்டிய பருத்தி வியாபாரிகள் மாலை ஆறு மணியைக் கடந்தும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள், மயிலாடுதுறை - தரங்கம்பாடி பிரதான சாலையில் உள்ள செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இடத்தில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வரவிடாமல் தடுத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டு கொள்முதலை புறக்கணிக்கிறார்கள்.
பருத்தி மூட்டை ஒன்றுக்கு மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை கூடுதலாக எடை வைத்து கேட்கின்றனர். இவ்விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு வாரந்தோறும் தொய்வின்றி கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செம்பனார்கோவில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கொள்முதல் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகளின் திடீர் போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேனி விவசாயியை குறிவைத்து ஆன்லைன் மோசடி - இருவரைக் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!