தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றிரவு லாரி ஒன்று மோதியதில் ஓஎச்டி லைன் அறுந்தது. இதனால் கேட் சிக்னல் பழுதானது.
அதனை சீரமைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் ரயில்கள் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ஆடுதுறை கேட் பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து டீசல் இன்ஜின் கொண்டு வரப்பட்டு தற்காலிகமாக ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் சென்னை, திருச்சி, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 3 மணி நேர காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
அறுந்த ஓஎச்டி லைனை சீரமைக்கும் பணியை இரவு நேரத்திலும் ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்துச் செல்லும் லாரி என்பது தெரியவந்தது.
இன்று காலை மின்பாதை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்தது. இதனை தொடர்ந்து வழக்கம்போல் இவ்வழித்தடத்தில் மின்சார இரயில்கள் இயங்க தொடங்கியது. இதனை தொடர்ந்து ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் மரணம்