மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, திமுக ஆட்சியில் பணிகள் முடிவடைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோருடன் வந்து புதிதாக தொடங்கப்பட்ட தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டனர். அவர்களுக்கு மீனவர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை திமுக அரசு முறையாக வழங்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1,058 பேருக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கவில்லை. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு வரும்போது அதிமுக ஆட்சியில் விசைப்படகுகளுக்கு தேவையான டீசல், மெக்கானிக்குகள் அனுப்பி, அதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் அரசு ஏற்றது.
ஆனால், திமுக ஆட்சியில் படகுகளுக்கு 1,200 லிட்டர் டீசல் உள்ளிட்ட செலவுகளை மீனவர்களின் தலையில் வைத்து வஞ்சிக்கின்ற அரசாக திமுக அரசு உள்ளது. ஆளுநர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும். ஆனால் ஆளுகின்ற அரசைப் பற்றி விமர்சனம் செய்ய அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக நின்று வெற்றி பெறும் என்று அண்ணாமலை பாஜக தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக அப்படி பேசுகிறார்.
2 கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளது. உரிமைத் தொகை பெற தகுதியுடையவர்களை சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட இருப்பதால், திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப் போகிறது.
கடலை நம்பி வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை கட்டமைப்பு, புதிய துறைமுகங்கள் அமைப்பு மீனவர்களுக்கு தேவையான சாதனங்களுக்காக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீனவர்களுக்கான பட்ஜெட்டில் நிதி குறைப்பு செய்யப்பட்டு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு, வருடத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், அரசுத் துறைகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளுக்கான காலிப் பணியிடங்களை கூட நிரப்பவில்லை” என்றார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி கைது.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை..!