நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பரசலூர் அருகே கடுவெளி, மகாராஜபுரம், கோட்டவம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் தாமதமாக இயந்திர நடவுசெய்தனர். நடவுசெய்து 40 நாள்களாகி பயிர் வளர்ந்துவரும் நிலையில் நெல்மணிகள் முளைக்கும் தண்டில் ஆனைக்கொம்பன் "ஈ" தாக்கி பயிர்களைச் சேதப்படுத்திவருகிறது.
கடுவெளி கிராமத்தில் பிரபாகர் என்பவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ அதிகளவில் ஊடுருவி பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளது. இதேபோல் செல்வராஜ், குமார், ஆனந்தன், ஜான் ஆகியோரது வயல்களிலும் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்குதல் உள்ளது. இந்த ஆனைக்கொம்பன் ஈ பயிரின் தண்டில் ஊடுருவி தண்டின் சாறுகளை உறிஞ்சி சேதப்படுத்திவருகிறது.
வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தலின்படி பூச்சிக்கொல்லி மருந்து அடித்ததில் ஆனைக்கொம்பன் ஈ கட்டுப்படுத்தப்பட்டாலும், பூச்சிகளின் தாக்குதலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேகமாக அடுத்த பகுதிக்கு ஊடுருவி பயிர்களைச் சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் கடுவெளி, மகாராஜபுரம், கோட்டவம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் பயனில்லை எனவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மைத் துறையினர் ஆய்வுசெய்து ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எச்சரிக்கையாக இருங்கள் மீனவர்களே - வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!