நாடு முழுவதும் ரயில்வே இருப்புப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் மின்சார எஞ்ஜின் பொருத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், மின்சார எஞ்ஜின் மூலம் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே இன்று முதல்கட்டமாக ஆறு மின்சார ரயில்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டன.
இந்த ரயிலை இயக்கிய எஞ்ஜின் டிரைவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜேந்திரன், "மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில்வே பாதையை மீண்டும் அமைக்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், முத்துப்பேட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயிலை இயக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்!