நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் திமுக ஒன்பது இடங்களிலும், அதிமுக ஏழு இடங்களிலும், சுயேச்சைகள் ஐந்து 5 இடங்களிலும் ஆகமொத்தம் 21 பேர் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலக தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகணேஷ் முன்னிலையில் சரியாக 11 மணிக்குத் தொடங்கியது. திமுக சார்பில் 20ஆவது வார்டில் வெற்றிபெற்ற கமலஜோதிதேவேந்திரன், அதிமுக சார்பில் 10ஆவது வார்டில் வெற்றிபெற்ற பவானி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் திமுக உறுப்பினர் கமலஜோதி 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக உறுப்பினர் பவானி 10 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றிபெற்ற ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகணேஷ் சான்றிதழ் வழங்கினார்.
இதனைத் தொடர்நது மதியம் 3.30 மணிமுதல் 4.00 மணிக்குள் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடத்த குறைந்தபட்சம் 11 உறுப்பினர்கள் மன்ற அரங்கில் இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே மன்ற அரங்கிற்கு வருகைதந்து கையெழுத்திட்டு காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் நான்கு உறுப்பினர்கள் உள்ளே சென்றனர்.
அப்பொழுது தேர்தல் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்ட 4.00 மணியை கடந்துவிட்டதால் தேர்தல் நடத்தும் அறை கதவு பூட்டப்பட்டது. அதன்பின்னர் 4.03-க்கு காலதாமதமாக வந்த ஏழு திமுக உறுப்பினர்கள் உள்ளே செல்லமுடியாமல் பூட்டப்பட்ட கதவை தட்டி கூச்சலிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆலோசித்து சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டு வெளியிலிருந்த மற்ற உறுப்பினர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது அறிவிக்கப்பட்ட நேரத்தில் வந்து காத்திருந்த உறுப்பினர்கள் காலதாமதமாக வந்த உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்து தேர்தல் அலுவலரிடம் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் விதிமுறைப்படி துணைத் தலைவர் தேர்தல் நடத்துவதற்கான போதிய உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் மன்ற அரங்கிற்குள் இல்லாததால் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் கலைந்துசென்றனர். தொடர்ந்து திமுக ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதியை திமுகவினர் ஆரவாரத்தோடு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவின் உமா மகேஸ்வரி தேர்வு