நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் செலவுக்கணக்கு பிரிவு பறக்கும்படை அதிகாரி தையல்நாயகி தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, பேச்சாவடி பெட்ரோல் பங்கில் பணம் கொடுக்காமல் ஏராளமானோர் பெட்ரோல் மட்டும் நிரப்பிச்சென்றதைக் கண்டனர்.
அந்த வாகனங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அதன் அருகே ஒருவர் உட்கார்ந்து கொண்டு பெட்ரோல் போடும் வாகனத்தின் எண்களை எழுதி டிக் செய்து கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், 8,240 ரூபாய்க்கு 83 வாகனங்களில் 107 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தன.
இதையடுத்து, மயிலாடுதுறை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் இந்த பெட்ரோல் செலவு அனைத்தும் அதிமுக வேட்பாளர் ஆசைமணி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.