மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகியது. 'வாரிசு' திரைப்படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளதாக பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உறவுகளின் மேன்மையைத் தெரியவைக்கும் விதமாகவும், கூட்டுக் குடும்பத்தின் உன்னதத்தை விளக்கும் விதமாகவும் வாரிசு திரைப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் செயல்பட்டு வரும் (யூரோகிட்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி) தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களையும் பள்ளிக்கு அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர்களையும் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மயிலாடுதுறையில் உள்ள ரத்னா திரையரங்கிற்குச் சென்று வாரிசு திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.
இப்பள்ளியில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் 60 மாணவர்கள் மற்றும் பள்ளியின் அருகில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசிக்கும் 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகளையும் அழைத்து வந்து வாரிசு திரைப்படத்தின் மூலம் குழந்தைகள் குடும்ப உறவுகளின் மாண்பினையும், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்வதோடு, தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டிகளும் குழந்தைகளோடு இணைந்து வெளியில் வந்ததால் மகிழ்ச்சியில் திகைத்தனர். இவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் பார்ப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாரிசு இயக்குநர் வம்சி குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!