மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி மணல் அள்ளப்படுகிறதா? என அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றில் மாதிரிவேளூர், பாலூரான் படுகை, பட்டியமேடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு அள்ளப்படும் மணல், குன்னம் என்ற இடத்தில் உள்ள யார்டில் குவிக்கப்பட்டு அங்கு இருந்து லாரிகளுக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுகிறது.
இந்த நிலையில், ஆளுங்கட்சி தலைமைக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளி லாரிகளில் நிரப்பும் பணியை செய்து வருவதாக புகர் எழுந்தது. இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல், பல அடிகள் ஆழத்திற்கு மணல் அள்ளி விற்பனை செய்து வந்ததாக புகார் கூறப்பட்டது.
இதனிடையே, சமீபத்தில் தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட்ட மூன்று இடங்களில் முப்பதுக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் டெம்போ வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனையில் மணல் எடுக்கப்பட்ட இடம், அதன் பரப்பளவு, ஆழம் ஆகியவை குறித்து அளவீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், முறைகேடாக எத்தனை யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடரங்கம், பட்டியமேடு, பாலூரான் படுகை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளுக்கு அமலாக்கத்துறையினர் ட்ரோன் ஆகியவற்றின் மூலம் 5 மணி நேரமாக ஆய்வு செய்தனர். குறிப்பாக, இந்த ஆய்வில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவு ஆழத்தில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது? என்பன உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: கரூர் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!