மயிலாடுதுறை: போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பேருந்தின் பின்னால் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனிடையே கூடுதல் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் பேருந்து இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. தற்போது மணல்மேடு பகுதியில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்னால் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்னால் தொங்கியபடியும், மேல்புறத்தில் அமர்ந்த படியும் செல்லும் காட்சிகளைப் பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பேருந்தில் இடம் கிடைக்காததால் இதுபோன்ற ஆபத்தான பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை கடைகளில் சோதனை...குட்கா பறிமுதல்