தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நேற்று (ஆக்.29) முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.
இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.30) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா நடவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மணல்மேட்டில் 31மி.மீட்டரும், சீர்காழியில் - 61மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.
அதேபோல் திருவாரூர், திருநெல்வேலி, நாகை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.