நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்டா மாவட்டத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது.
அதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்கப்பட வேண்டும். நெல்லின் ஈரப்பத அளவை 22 விழுக்காடாக உயர்த்த மத்தியக் குழு முடிவெடுக்கும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டிற்காக எந்த நல்ல முடிவையும் மத்தியக்குழு எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுதந்திரமாக செயல்படவில்லை. அவர் மத்திய அரசின் முகவராகவே செயல்படுகிறார். சட்டப்பேரவையில் எந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை மத்திய அரசு நிறைவேற்றுவது இல்லை.
ஆர்எஸ்எஸ் நாட்டை ஆட்சி செய்வதுபோல், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி செய்கிறார். அதன்படி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு புறமும், ஆளுநர் ஆட்சி மறுபுறமும் என்று இரட்டை ஆட்சி நடக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ஒதுக்கீடு: ஆளுநருடன் மூத்த அமைச்சர்கள் 5 பேர் சந்திப்பு!