நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையாறு ஒழுகைமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிமாறன்(26) ராகவி தம்பதி. மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு மணிமாறன் பழனியில் இருந்து வந்த அவரது நண்பன் விஸ்வநாதன்(21) என்பவருடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் மது அருந்தியுள்ளார்.
ராகவி, மணிமாறனை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. மறுநாள் காலை ராகவி வீட்டைவிட்டு வெளியில் வந்துபார்த்த போது மணிமாறன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். உடனே ராகவி அருகில் இருந்த விஸ்வநாதன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் உடலை இறக்கினார். பொங்கல் விழா நாட்களாக இருந்ததால் அவசரமாக மணிமாறனின் உடலை உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், விஸ்வநாதன் நேற்று எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மணிமாறனை குடிபோதையில் அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்து சரணடைந்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் பொறையாறு காவல்துறையினரிடம் விஸ்வநாதனை ஒப்படைத்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரிக்கையில் மனசாட்சி உறுத்தியதால் சரணடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்த்த தொடர் படுகொலைகள்! நால்வர் கைது!