நாகை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக நாகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியலில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 511 வாக்கு சாவடிகளில் 6 லட்சத்து, 42 ஆயிரத்து, 617ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து ,62 ஆயிரத்து, 89 பெண் வாக்காளர்கள், 41 மூன்றாம் பாலினத்தவ வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 13 லட்சத்து, 04 ஆயிரத்து ,747 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் 18 வயது நிரம்பிய நபர்கள் வருகின்ற நவம்பர் மாதம் 12 மற்றும் 13 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனவும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.